இந்தியாவில் ஸ்டார்லிங் கட்டணம் அறிவிப்பு: மாத இணைய சேவை ரூ.8,600
ஸ்டார்லிங் இந்தியாவில் தனது செயற்கைக்கோள் இணைய சேவைக்கான கட்டணத்தை அறிவித்துள்ளது. மாத சந்தா ரூ.8,600 மற்றும் ஹார்ட்வேர் கிட் ரூ.34,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்டார்லிங் (Starlink) சேவை தற்போது இந்தியாவில் தொடங்குவதற்கு மிகவும் அருகில் வந்துள்ளது. எலான் மஸ்க் நிறுவனமான ஸ்டார்லிங், இந்தியாவில் தனது வீட்டு பயன்பாட்டு செயற்கைக்கோள் இணைய சேவைக்கான கட்டண விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதிவேக இணைய சேவை குறைந்த கட்டணத்தில் கிடைக்காது என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. இருப்பினும், தொழில்துறை வல்லுநர்கள் எதிர்பார்த்த வரம்பிற்குள்ளேயே இந்த கட்டணம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டார்லிங் இந்தியா இணையதளத்தின் தகவலின்படி, மாத சந்தா கட்டணம் ரூ.8,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக, ஒரு முறை பயன்படும் ஹார்ட்வேர் கிட் ரூ.34,000 செலவில் வாங்க வேண்டும். இந்த சாதனத்தை பயனர்கள் தாங்களே எளிதாக நிறுவி பயன்படுத்தலாம். 30 நாட்கள் இலவச சோதனை, வரம்பற்ற டேட்டா, 99.9% செயல்திறன் மற்றும் மோசமான வானிலையிலும் செயல்படும் நெட்வொர்க் ஆகிய அம்சங்கள் இதில் வழங்கப்படுகின்றன.
தற்போது இந்தியாவில் சேவை இன்னும் தொடங்கப்படாத நிலையில், நகர்வாரியான கட்டண விவரங்கள் வெளியிடப்படவில்லை. சேவை கிடைக்காத பகுதிகளுக்காக, “இப்பகுதியில் சேவை தற்போது கிடைக்கவில்லை” என்ற அறிவிப்புடன் மின்னஞ்சல் பதிவு செய்யும் வசதி மட்டும் வழங்கப்படுகிறது. ஸ்டார்லிங் கிடைப்புத்திட்ட வரைபடத்தில் இந்தியா இன்னும் “ஒழுங்குமுறை அனுமதி நிலுவையில்” என்ற நிலையிலேயே காணப்படுகிறது.
சேவை தொடங்கப்பட்டவுடன், ஸ்டார்லிங், ஜியோ-SES மற்றும் யூட்டல்சாட் OneWeb நிறுவனங்களுடன் நேரடி போட்டியில் இறங்க உள்ளது. செயற்கைக்கோள் அலைவரிசை ஒதுக்கீடு ஏலமாக வழங்கப்படுமா அல்லது நிர்வாக முறையில் வழங்கப்படுமா என்பதையும் அரசு தற்போது பரிசீலித்து வருகிறது.
ஸ்டார்லிங் நிறுவனத்தின் இந்தியத் திட்டத்தில் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், போட்டி நிறுவனங்கள் நிறுவன வாடிக்கையாளர்களை முக்கியமாக இலக்காகக் கொண்டுள்ள நிலையில், ஸ்டார்லிங் நேரடியாக பொதுமக்களுக்கு சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கான கட்டண விவரங்கள் தற்போது வெளியிடப்படவில்லை.
இந்தியாவில் தனது கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பெங்களூருவில் கணக்கியல், நிதி, வரி மற்றும் கட்டண மேலாண்மை நிபுணர்களுக்கான புதிய வேலைவாய்ப்புகளையும் ஸ்டார்லிங் அறிவித்துள்ளது. மேலும், மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா, சண்டிகர், லக்னோ போன்ற நகரங்களில் கேட்வே எர்த் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு துறையிடமிருந்து ஸ்டார்லிங் நிறுவனத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கான செயற்கைக்கோள் இணைய சேவை உரிமம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்டது. தற்போது கட்டண விவரங்கள் வெளியாகி, இறுதி அனுமதியும் விரைவில் கிடைக்கும் என்ற நிலையில், ஸ்டார்லிங் இந்திய சந்தையில் நுழைய தயாராக உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0